321 ஓட்ட இலக்கை பெற முன்னர் வீரர்களுக்கு கூறியது என்ன : வெளிப்படுத்தினார் மெத்தியூஸ் (காணொளி)

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நாம் வெற்றி பெறுவோம் என யாரும் நம்பவில்லை. ஆனால் பல அழுத்தங்களுக்கு மத்தியில் களமிறங்கி சுதந்திரமான முறையில் விளையாடியமையால் போட்டியை வெற்றிக்கொண்டோம். இதேபோன்று எதிர்வரும் போட்டிகளிலும் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் எந்தவொரு அணியையும் இலகுவாக வெற்றிக் கொள்ள முடியும் என இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்தார்.

இதேவேளை 321 ஓட்ட இலக்கை பெற முன்னர் இலங்கை அணி வீரர்களுக்கு என்ன கூறினார் என்பது தொடர்பிலும் மெத்தியூஸ் தெரிவித்துள்ளதோடு குமார் சங்கக்கார வழங்கிய ஆலோசனைகள் என்ன என்பதையும் வெளிப்படுத்தினார்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவடைந்த பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே மெத்தியூஸ் இதனைத் தெரிவித்தார்.

”இந்தியாவுக்கு எதிரான போட்டி ஆரம்பமாவதற்கு முன்னரே வீரர்களுடன் கலந்துரையாடினோம். சிறந்த பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்ட வீரர்களை கொண்ட இந்திய அணிக்கு எதிராகவே களமிறங்க உள்ளோம். அணி வீரர்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டியத் தேவை இல்லை. எம்மால் என்ன முடியோ அதனை இன்றைய நாளில் செய்வோம்.

இதேபோன்று நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற போது ஆடுகளம் முதலில் பந்து வீசுவதற்கு சாதகமான முறையில் இருந்தது. நாங்கள் நினைத்ததை விட ஆடுகளம் எமக்கு சாதகமாக காணப்பட்டது.

குறிப்பாக எமது வீச்சாளர்களுக்கு இந்நேரத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். பிரபல துடுப்பாட்ட வீரர்களை கொண்ட இந்திய அணியை 320 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியது மிகப்பெரிய விடயமாகும். 

இந்த ஆடுகளத்தை பொறுத்தவரையில் 310, 320 என்ற ஓட்ட எண்ணிக்கையை இலகுவாக பெறமுடியும். இந்திய அணியை 320 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தி இலங்கை அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீசியமை சிறப்பான அம்சமாகும்.

பந்து வீச்சை மேற்கொண்டு அரங்கு திரும்பிய பின்னர், 320 ஓட்ட இலக்கை அடைவதற்கு யாரும் அவசரம் கொள்ள வேண்டியத் தேவையில்லை என்று வீரர்களிடம் கூறினேன்.

மேலும் நிதானமாக துடுப்பெடுத்தாடி சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தால் இடைநிலையில் களமிறங்கும் வீரர்களால் இலகுவாக துடுப்பெடுத்தாட முடியும். எனவே யாரும் அவசரப்படாமல் துடுபெடுத்தாடுமாறு கோரினேன்.

ஆரம்பத்தில் 30, 40 ஆட்டங்களை பெறாமல் 70 தொடக்கம் 100 ஓட்டங்களை பெற்றாமல் பின்வரிசையில் களமிறங்கும் வீரர்களுக்கு இலகுவாக இருக்கும் எனவும்  கூறினோம்.

இந்நிலையில் தனுஷ்க குணதிலக, குசேல் மெண்டிஸ் ஆகியோர் சிறப்பான ஆரம்பத்தை பெற்றுகொடுத்தனர். இதனையடுத்து குசேல் பெரேரா மற்றும் அசேல குணரட்ன ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்ட உதவியுடன் இந்த போட்டியை வெற்றிக் கொள்ள முடிந்தது.

இதேவேளை போட்டிக்கு முன்னர் குமார் சங்கக்கார, ஆடுகளம் தொடர்பிலும் துடுப்பாட்டம் நுணுக்கங்கள் தொடர்பிலும் எமக்கு பல ஆலோசனைகளை வழங்கினார். அவர் துடுப்பாட்டத்தில் அரசன் போன்றவர். இந்த ஆலோசனைகளுடன் நாம் களமிறங்கினோம். இதேவேளை இளம் வீரர்கள் இந்தியாவுக்கு அகந்தையுடன் விளையாட வேண்டும் எனவும் சங்கா எமக்கு கூறினார்.”

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *