2nd ODI – SLvSA: தென்னாபிரிக்கா 4 விக்கெட்டுகளால் வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி தொடரில் 2- -0 என முன்னிலையில் உள்ளது. 245 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என பதிலெடுத்தாடிய அவ்வணி 6 விக்கெட்டுகளை இழந்து 42.5 பந்து வீச்சுக்களில்246 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.அவ்வணியின் குயின்டன் டி கொக் 87 ஓட்டங்களை பெற்றார்.பந்து வீச்சில் இலங்கை சார்பாக 60 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.போட்டியின் ஆட்ட நாயகனாக குயின்டன் டி கொக் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

இரு அணிகளும் மோதும் மூன்றாவது போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி மெத்திவ்ஸ் மற்றும் டிக்வெல்ல ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 244 ஓட்டங்களை பெற்றது.

தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்று வரும் இந்த போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியின் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார். இதன்படி களமிறங்கிய இலங்கை அணி உபாதைக்குள்ளாகியுள்ள லஹிரு குமாரவுக்கு பதிலாக அறிமுக வேகப்பந்து வீச்சாளர் கசுன் ராஜிதவையும், லக்ஷான் சந்தகனுக்கு பதிலாக அறிமுக சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூரியவையும் களமிறக்கியது. எவ்வாறாயினும், முதல் ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று, தொடரில் 1–0 என முன்னிலை வகிக்கும் தென்னாபிரிக்க அணி, அதே பதினொருவருடன் இப் போட்டியில் களமிறங்கியிருந்தது.

முதல் போட்டியில் வேகப்பந்து வீச்சின் மூலமாக இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களை தடுமாறச் செய்த தென்னாபிரிக்க அணி, இன்றைய போட்டியிலும் அதே பாணியை கையாண்டது. தென்னாபிரிக்க அணிசார்பில் முதல் பந்து ஓவரை காகிஸோ றபாடா ஆரம்பிக்க, இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் எச்சரிக்கையுடன் கூடிய துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் ஓவரில் 4 ஓட்டங்களை பெற்ற இலங்கை அணி இரண்டாவது ஓவரில் சரிவை சந்தித்தது. இம்முறை றபாடாவின் பந்து வீச்சை தற்காப்புடன் கையாண்ட இலங்கை அணிக்கு, லுங்கி என்கிடி கடுமையாக சவாலை முன்வைத்தார்.

இரண்டாவது ஓவரின் இரண்டாவது மற்றும் நான்காவது பந்துகளுக்கு இரண்டு பௌண்டரிகளை விளாசிய உபுல் தரங்க, லுங்கி என்கிடியின் அதே பந்து ஓவரின் ஐந்தாவது பந்தில் விக்கெட் காப்பாளர் குயிண்டன் டி கொக்கிடம் பிடிகொடுத்து 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய குசல் மெண்டிஸ் வந்த வேகத்தில் ஓட்டமெதுவும் பெறாமல் முதல் பந்திலேயே எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்து, அணிக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

முதல் போட்டியை போன்று இந்த போட்டியிலும், இலங்கை அணியின் விக்கெட்டுகள் சரிக்கப்படுமா? என்ற கேள்விகள் எழ, குசல் பெரேரா மற்றும் நிரோஷன் டிக்வெல்ல இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்காக 43 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று, அணிக்கு ஆறுதல் அளித்தனர். எனினும் முதல் போட்டியில் அரைச்சதம் அடித்து அணிக்கு நம்பிக்கை அளித்திருந்த குசல் பெரேரா 12 ஓட்டங்களுடன், பெஹலுக்வாயவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

அணித் தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸுடன் இணைந்து துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நிரோஷன் டிக்வெல்ல தனது ஆறாவது ஒருநாள் அரைச்சதத்தை பூர்த்திசெய்தார். இந்த அரைச்சதமானது சுமார் 16 இன்னிங்ஸ்களுக்குப் பின்னர் டிக்வெல்ல பெற்ற அரைச்சதமாக பதிவாகியது. தொடர்ந்தும் இருவரும் நிதானமாக ஆட இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 100 ஓட்டங்களை கடந்தது.

குறித்த இருவரும் நான்காவது விக்கெட்டுக்காக 67 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, டிக்வெல்ல, பெஹலுக்வாயோ வீசிய 26ஆவது ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

பெஹலுக்வாயோ வீசிய பந்து துடுப்பாட்ட மட்டையில் பட்டு, நேரடியாக விக்கெட்டை தாக்க, டிக்வெல்ல 69 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார்.

டிக்வெல்லவின் இடத்தை நிரப்புவதற்காக இடதுகை துடுப்பாட்ட வீரர் செஹான் ஜயசூரிய களமிறங்கிய நிலையில், மறுபக்கம் துடுப்பெடுத்தாடிய அணித் தலைவர் மெதிவ்ஸ் நிதானமாக ஆடி, 36ஆவது அரைச்சதத்தை கடந்தார். எனினும், அவருடன் இணைந்து துடுப்பெடுத்தாடிய செஹான் ஜயசூரிய 18 ஓட்டங்களுடன் வியான் முல்டரின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய திசர பெரேரா 20 பந்துகளுக்கு 19 ஓட்டங்களை பெற்று, லுங்கி என்கிடியின் பந்து வீச்சில் வெளியேறினார்.

தொடர்ந்து களமிறங்கிய அகில தனஞ்ஜய 9 ஓட்டங்களுடனும், சுரங்க லக்மால் 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க, இறுதிவரை போராடிய அஞ்செலோ மெதிவ்ஸ் ஆட்டமிழக்காமல் 110 பந்துகளை எதிர்கொண்டு 78 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 244 ஓட்டங்களை பெற்றது. மெதிவ்ஸுடன் இறுதி விக்கெட்டுக்காக இணைந்த அறிமுக வீரர் பிரபாத் ஜயசூரிய 11 பந்துகளுக்கு 11 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்திருந்தார். தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சை பொருத்தவரையில், பெஹலுக்வாயோ 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், லுங்கி என்கிடி 50 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தென்னாபிரிக்க அணி தங்களது வெற்றியை உறுதிசெய்ய வேண்டுமாயின் 50 ஓவர்களில் 10 விக்கெட்டுகள் கைவசமிருக்க, 245 ஓட்டங்களை பெற வேண்டும். தம்புள்ளை மைதானத்தை பொறுத்தவரையில் இலங்கை அணி கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி 289 என்ற வெற்றியிலக்கை அடைந்தமையே இதுவரை சாதனையாக உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment