2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய பங்களாதேஷ்

பங்களாதேஷ் அணி மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் பங்களாதேஷும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி ஒருநாள் போட்டி செயிண்ட் கிட்ஸ் நகரில் நேற்று (28) நடைபெற்றது.

நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க துடுப்பாட்டக்காரர்களாக தமிம் இக்பாலும், அனமுல் ஹக்கும் களமிறங்கினர்.

அனமுல் 10 ஓட்டங்களிலும், ஷகிப் அல் ஹசன் 37 ஓட்டங்களிலும், முஷ்பிகுர் ரஹிம் 12 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். நிதானமாக துடுப்பெடுத்தாடிய தமிம் இக்பால் சதமடித்து அசத்தினார். அவர் 103 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களம் இறங்கிய மகமதுல்லா 67 ஓட்டங்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 301 ஓட்டங்கள் பெற்றுக்கொண்டது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஜேசன் ஹோல்டர், ஆஷ்லி நர்ஸ் ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, 302 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது. தொடக்க துடுப்பாட்டக்காரர்களாக கிறிஸ் கெயிலும், எவின் லெவிசும் களம் இறங்கினர்.

லெவிஸ் 13 ஓட்டங்களிலும், கெயில் 73 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களம் இறங்கிய ஷா ஹோப் 64 ஓட்டங்களிலும், ரோவ்மன் பாவெல் 74 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

ஏனைய வீரர்கள் யாரும் சரியாக விளையாட காரணத்தால் மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 283 ஓட்டங்களை எடுத்து தோல்வி அடைந்தது.

இந்த வெற்றி மூலம் பங்களாதேஷ் அணி ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

Related posts

Leave a Comment