வன்முறைக்கு மத்தியில் வாக்குப் பதிவு: தற்கொலை தாக்குதலில் 31 பேர் பலி

பாகிஸ்தான் பொதுத் தேர்தல் வாக்குப்பதி நேற்று இடம்பெற்றதோடு இதனையொட்டி வன்முறைகள் வெடித்துள்ளன. குவெட்டா நகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டனர்.

கட்சிப் பணியாளர்களுக்கு இடையில் நாட்டின் ஏனைய பகுதிகளில் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் சிறு குண்டு வெடிப்புகளில் பலரும் காயமடைந்ததோடு இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

பரபரப்பாக இடம்பெற்ற வாக்குப் பதிவில் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் இம்ரான் கான் மற்றும் தற்போது சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.

எனினும் வன்முறை மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் இந்த தேர்தலில் அதிக தாக்கம் செலுத்தும் காரணிகளாக மாறியுள்ளன. தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கு அப்பட்டமான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக பாகிஸ்தான் மனித உரிமை ஆணைக்குழு குறிப்பிடுகிறது.

நாட்டில் ஊழலை ஒழிப்பதாக இம்ரான் கான் வாக்குறுதி அளிக்கின்றபோதும் அவருக்கு பாகிஸ்தானின் பலம்மிக்க இராணுவம் மற்றும் உளவுப் பிரிவு உதவுவதாக அவரது போட்டியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பாகிஸ்தான் வரலாற்றின் அரைப்பகுதியை அந்நாட்டு இராணுவமே ஆட்சி புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் அரசியல் கொந்தளிப்புகள் வழக்கமான ஒன்று என்றபோதும் கடந்த ஒருசில மாதங்களாக அந்த சூழல் உச்சம் பெற்றிருந்தது. கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நவாஸ் ஷரீப் இம்முறை தேர்தலை சிறையில் இருந்தே அவதானித்து வருகிறார். பனாமா ஆவணக்கசிவு விவகாரத்தில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதை அடுத்தே அவர் சிறைக்கு செல்லவேண்டி ஏற்பட்டுள்ளது.

370,000 துருப்புகள் மற்றும் நூற்றுக்கணக்கான பொலிஸார் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு தேர்தல் தினத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டபோதும் பரவலான வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

பலுகிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகர வாக்குச் சாவடியில் உள்ள பொலிஸாரை இலக்கு வைத்து தற்கோலை தாக்குதல் ஒன்று இடம்பெற்றது. இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழு பொறுப்பேற்றுள்ளது.

கைபர் பாக்துன்க்வா மாகாணம் சிவாபி மாவட்டத்தில் வாக்குச்சாவடிக்கு வெளியே அவாமி நேசனல் கட்சி மற்றும் இம்ரான் கானின் பாகிஸ்தான் தஹ்ரீக் இ இன்சாப் கட்சி ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இம்ரான் கான் கட்சி தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார். 2 பேர் காயமடைந்தனர். மிர்புர்காஸ் வாக்குச்சாவடிக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். லர்கானா பகுதியில் உள்ள அரசியல் கட்சி முகாமில் பட்டாசு வெடித்தபோது 4 பேர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானின் 71 ஆண்டு வரலாற்றில் அந்நாட்டு இராணுவம் மாறி மாறி ஆட்சி நடத்தியுள்ளது. இந்நிலையில் இரண்டாவது முறையாகவே சிவில் அரசு ஒன்றில் இருந்து மற்றொரு சிவில் அரசுக்கு ஆட்சி மாறும் நிகழ்வாக இந்த தேர்தல் உள்ளது.

எனினும் தேர்தல் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு பிரிவுகளால் தாம் ஒடுக்குமுறைக்கு முகம்கொடுப்பதாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக்–நவாஸ் கட்சி குற்றம்சாட்டுகிறது. இந்த பாதுகாப்பு கட்டமைப்பு நீதிமன்றத்தின் உதவியோடு இம்ரான் கானுக்கும் அவரது தஹ்ரீன் இ இன்சாப் கட்சிக்கும் உதவுவதாக நவாஸ் ஷரீப் தரப்பு குற்றம்சாட்டுகிறது.

இந்நிலையில் நவாஸ் ஷரீப் கட்சியின் பலரும் இம்ரான் கான் கட்சிக்கு தாவி இருப்பது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருந்து.

பிலாவல் புட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும், அதனோடு கூட்டணி வைத்துள்ள முத்தாஹிதா மஜ்லிஸ் இ அமல் கட்சியும் தற்போதைய பொதுத்தேர்தலில் முக்கிய அங்கம் வகிக்கின்றது.

Related posts

Leave a Comment