மஹிந்தவிடம் மூன்று மணிநேர விசாரணை

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சுமார் 3 மணி நேர விசாரணையின் பின், CID யினர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிலிருந்து சென்றுள்ளனர்.

இன்று (17) முற்பகல் 11.00 மணியளவில், கொழும்பு 07, விஜேராம வீதியிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் வீட்டுக்கு வந்த குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பிற்பகல் 2.00 மணியளவில் அங்கிருந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ மற்றும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரிடமும், குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2008 மே மாதம் 22 ஆம் திகதி, ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு, சித்திரவதைக்குள்ளான நிலையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம இல்லத்தில் CID (11.44am)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் வீட்டிற்கு, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (CID) வாக்குமூலம் பெறுவதற்காக சென்றுள்ளனர்.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது பெயரும் குறிப்பிடப்படுவதாக தெரிவிக்கப்படுவதற்கமைய, CID அதிகாரிகள், தற்போது (17) கொழும்பு 07, விஜேராம வீதியிலுள்ள அவரது இல்லத்தில் வாக்குமூலம் பெறுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (05) கொழும்பிலுள்ள தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில், குறித்த விடயம் தொடர்பில் வினவப்பட்ட போது,

அதற்குப்பதிலளித்த அமைச்சர், இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன, கீத் நொயார் தாக்கப்பட்ட விவகாரத்தில் அவருக்கும் பதில் வழங்க வேண்டியிருக்கும். ஏனென்றால் இந்த சம்பவத்தில் பல இடங்களில் அவரின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

அவருக்கு இந்த வழக்கில் என்ன தொடர்பு இருந்தது என்று எனக்குத் தெரியாது எனத் தெரிவித்த அவர், பிணைமுறி விசாரணையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிணைமுறி ஆணைக்குழுவிற்கு சென்று சாட்சியமளித்தார். அதே போன்று இந்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதி விசாரணைக்கு அழைக்கப்படுகிறார். அவருக்கு அங்கு சென்று வாக்குமூலம் அளிக்க வேண்டியிருக்கும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment