பிரிட்டனின் அடுத்த பிரதமரை தெரிவு செய்வதற்கான தேர்தல்

பிரிட்டனின் அதிகாரமிக்க அடுத்த பிரதமரை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற தேர்தல் இன்று விறுவிறுப்பாக இடம்பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

பிரிட்டனில் ஆட்சியிலுள்ள தெரசா மே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சிக்காலம், எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுவரை இருக்கும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான தீர்மானத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில், இடைத்தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்ற அனுமதியை பெற்றார் திரேசா மே.

மேலும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை இம்மாதம் 19ஆம் திகதி இடம் பெறவுள்ளது. குறித்த பேச்சுவார்த்தையின்போது வலிமையான தலைமையாக செயற்படவேண்டுமென்பதற்காக பாராளுமன்ற இடைத்தேர்தலில் தெரசா மே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் ஜெர்மி கார்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சி என்பன போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் பயங்கரவாத தாக்குதல்களால் ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில் பிரசாரங்கள் முடிந்த நிலையில், இன்று (8) பிரிட்டனின் 650 பாராளுமன்ற தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

குறித்த தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் பிரசாரங்கள் உச்சகட்டத்தில் இருந்தபோது, தேர்தலில் தெரசா மேக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. இருப்பினும் மான்செஸ்டரில் நடந்த பயங்கரவாத தாக்குதல், லண்டனில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் என்பன பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படும் சூழலில் இன்றய தினம் தேர்தல்கள் இடம்பெற்றுவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *