பிரகீத் விடயம் தொடர்பில் ஏ.எச்.94 புனைபெயர்கொண்ட இராணுவ அதிகாரி விரைவில் கைது?

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்திச் செல்லப்பட்டு, காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வரும் குற்றப்புலனாய்வு பிரிவினர், தமது விசாரணைக்கு அமைய மற்றுமொரு இராணுவ அதிகாரியை கைது செய்யவுள்ளதாக தெரியவருகிறது.

பிரகீத் எக்னெலிகொட முதன்முறையாக கடத்தப்பட்டமை சம்பந்தமான ஏ.எச்.94 என்ற புனைப்பெயரில் அழைக்கப்படும் கிரித்தலை இராணுவப் புலனாய்வு முகாமில் சேவையாற்றியதாக தெரிவிக்கப்படும் மேஜர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்படவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவத்தின் இரண்டாவது சந்தேகநபரான கேர்ணல் சிறிவர்தனவின் வீட்டை சோதனையிட்ட போது, எக்னேலிகொடவை கடத்தி செல்வது சம்பந்தமான கிரித்தலை புலனாய்வு முகாமில் தயாரிக்கப்பட்ட அறிக்கை கிடைத்துள்ளதுடன், கைது செய்யப்படவுள்ள அதிகாரியே குறித்த அறிக்கையை கொழும்பிற்கு கொண்டு வந்து அது தொடர்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்படவுள்ள அதிகாரி, எக்னெலிகொட கடத்தப்பட்டதில் இருந்து காணாமலாக்கப்பட்ட சம்பவம் வரை சம்பந்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றன. ஏ.எச்.94 என்ற புனைப்பெயரில் அழைக்கப்படும் அதிகாரி யார் என்பதை வெளியிடுமாறு, குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றம் ஊடாக தொடர்ந்தும் இராணுவப் புலனாய்வு பிரிவிடம் கோரிக்கை விடுத்து வந்துள்ளது.

எனினும் அந்த அடைமொழியில் அழைக்கப்பட்ட அதிகாரி எவரும் கிரித்தலை முகாமில் இருக்கவில்லை என இராணுவ புலனாய்வு பிரிவினர் கூறியுள்ளனர். எவ்வாறாயினும் கடந்த ஜூன் மாதம் 19ஆம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட அதிகாரி தொடர்பான தகவல்களை இராணுவம் வழங்கியுள்ளது. இதற்கு அமைய விசாரணைகள் நடைபெற்று வருவதுடன் எதிர்வரும் நாட்களில் இராணுவ அதிகாரி கைது செய்யப்பட உள்ளதாக தெரியவருகிறது.

Related posts

Leave a Comment