பாகிஸ்தான் விமான நிலையங்களில் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் அரச மரியாதை இரத்து

பாகிஸ்தான் விமான நிலையங்களில் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் அரச மரியாதை இரத்து செய்யப்படுவதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்றதில் இருந்து அதிரடி சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
ஆடம்பர பிரதமர் பங்களா தேவையில்லை என்று கூறி இராணுவ செயலாளரின் 3 படுக்கை அறையுடன் கூடிய வீட்டில் தங்கியுள்ளார். தன்னுடன் 2 பணியாளர்களை மட்டுமே உதவிக்கு வைத்திருக்கும் அவர், 2 அரச கார்களை மட்டுமே பயன்படுத்துகிறார்.

ஆளுநர் மாளிகைகளில் ஆடம்பர வசதி கூடாது என உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி, பிரதமர், இராணுவத் தலைமை தளபதி மற்றும் அரச அதிகாரிகள் விமானத்தில் முதல் வகுப்பில் பயணிப்பதற்கும் அண்மையில் தடை விதித்தார்.

இந்த நிலையில், மற்றொரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். பொதுவாக விமான நிலையங்களில் அரசியல்வாதிகள், நீதிபதிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு அரச மரியாதை வழங்கப்பட்டு வருகிறது. இனி அவர்களுக்கு விமான நிலையத்தில் அரச மரியாதை வழங்கக்கூடாது, மீறி சிறப்பு மரியாதை அளித்தால் விமான நிலைய குடியுரிமை அதிகாரியும் பொறுப்பதிகாரியும் பதவி நீக்கப்படுவர் என கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related posts

Leave a Comment