நீரில் மூழ்கிய கிராமங்களுக்கு மீட்பாளர் விரைவு: 20 பேர் பலி

லாவோசில் அணை உடைந்து கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உயிர்தப்பியோரை மீட்பாளர்கள் வேகமாக தேடி வருகின்றனர். இந்த அனர்த்தத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் குறைந்தது 100 பேர் காணாம்போயிருப்பதோடு ஆயிரக்கணக்கானோர் தமது வீடுகளை இழந்துள்ளனர்.

வெள்ளத்திற்கு மத்தியில் கிராமங்களில் சிக்கி இருக்கும் மக்களை வெளியேற்றுவதற்கு அட்டபியு மாகாண நிர்வாகம் ஹெலிகொப்டர்கள் மற்றும் படகுகளை பயன்படுத்தி வருகிறது.

லாவோஸ், தாய்லாந்து மற்றும் தென் கொரிய நிறுவனங்கள் இணைந்து கட்டிவரும் நீர்மின் திட்ட அணை ஒன்றே இடிந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, உடை, குடிநீர் மற்றும் மருந்துகள் போன்ற உதவிகளை உள்ளுர் நிர்வாகம் அரசு மற்றும் ஏனைய சமூகங்களிடம் கோரியுள்ளது.

திடீர் வெள்ளத்தில் இருந்து உயிர்தப்பியவர்கள் தமது வீடுகளின் கூரைகளில் இருக்கும் காட்சிகள் இந்த பேரழிவு தொடர்பிலான வீடியோ பதிவுகளில் காண முடிகிறது.

90 வீத கட்டுமானம் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு திறக்கப்படவிருந்த அணையே இடிந்து விழுந்துள்ளது. புதிதாக கட்டப்பட்டு வரும் இந்த அணையின் நீர்மின் திட்டத்தால் அங்குள்ள மக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சாத்தியமான தாக்கங்கள் குறித்து சுற்றுச்சூழல் குழுக்கள் ஏற்கனவே அச்சத்தை வெளிப்படுத்தியிருந்தன.

தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக ‘பெருக்கெடுத்த நீர்’ அணையை நோக்கி பாய்ந்ததை தாங்காமல், அணை உடைந்துவிட்டதாக இதன் கட்டுமான நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment