தொழிற்சங்க நடவடிக்கையில் வனஜீவராசி அதிகாரிகள்: சிக்கலை எதிர்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள்

மின்னேரியா தேசிய பூங்காவில் பணிபுரியும் வனஜீவராசி அதிகாரிகளை தாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து, பொலன்னறுவை பிராந்திய வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதனால், கவுடுல்ல, மின்னேரியா, வஸ்கமுவ, அங்கம்மெடில்ல ஆகிய பூங்காக்களுக்கு செல்வதில் சுற்றுலாப் பயணிகள் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.

களப்பணிகள் மற்றும் சுற்றுலா சேவையிலிருந்து விலகி, அலுவலக சேவையை மட்டுமே முன்னெடுப்பதாக கவுடுல்ல தேசிய பூங்காவின் பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.

மின்னேரிய தேசிய பூங்காவிற்கு அனுமதியின்றி பிரவேசித்து, சட்ட ஒழுங்கை மீறிய குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் வனஜீவராசி அதிகாரிகளால் மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, வனஜீவராசிகள் அலுவலகத்திற்குள் நுழைந்த மீனவர்கள் சிலர், அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்கொண்டு, கைது செய்யப்பட்டிருந்த மீனவரை அழைத்துச்சென்றதாக வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மீனவர்களின் தாக்குதலில் 10 அதிகாரிகள் காயமடைந்ததுடன், நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் மூவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் வன ஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

Leave a Comment