தேர்தல் தொடர்பான சட்டங்கள் இழுபறி நிலையில் தொடர்கிறது

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான உலகளாவிய பிரகடணத்தின் 21வது பிரிவில் ‘ஜனநாயக நாடொன்றில் ஆட்சி அதிகாரம் மக்களின் விருப்பமாக அமைய வேண்டும். அந்த விருப்பமானது சரியான நேரத்தில் நடாத்தப்படும். உண்மையான வாக்களிப்பின் ஊடாக தெரிவிக்கப்பட வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் தாமதமடைதல், தேர்தலை நீதமற்ற வகையில் நடாத்துதல் போன்றன குற்றமானது என இந்நாட்டின் தேர்தல்கள் ஆணைக்குழு பகிரங்கமாகவே குறிப்பிடுகின்றது. அவ்வாறான பின்புலத்தினுள் மாகாண சபைகளுக்கான தேர்தல் காலம் தாழ்த்திக் கொண்டிருப்பது தொடர்பில் குற்றம் சுமத்தப்படுவது தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கேயாகும். தேர்தல் நடாத்தப்படுவதற்கான தாமதம் தொடர்பில் உண்மையான நிலையினை அறிந்து கொள்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடன் மேற்கொண்ட நேர்காணல் இது.

கேள்வி: – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அவர்களே! அடுத்து எந்த தேர்தல் நடத்தப்படுகிறது.

பதில் : — தற்போது கிழக்கு, வட மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகளின் காலம் கடந்து போயிருக்கின்றது. ஒக்டோபர் மாதத்தில் மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடையவுள்ளது. இந்த ஆறு சபைகளினதும் தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவதாயின் நடாத்துவதற்கான நெருங்கிய தினம் ஜனவரி 5ம் திகதியாகும். பாராளுமன்றத்தின் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஜனவரி 12ம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ மாகாண சபைகளின் தேர்தல்களை நடாத்துவதற்கு இணக்கம் தெரிவித்திருக்கின்றார்கள்.

தென் மற்றும் மேல் ஆகிய மாகாண சபைகளை உரிய காலத்திற்கு முன்னர் கலைத்தால் எட்டு மாகாண சபைக்குமான தேர்தல்களை ஒரே தினத்தில் வைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் மாத்திரம் 2019ம் ஆண்டு ஒக்டோபர் மாத்தில் முடிவடைகின்றது.

கேள்வி: – – மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவது தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரே என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கின்றார். புதிய முறையினை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படுமாயின் பழைய முறையில் ஏன் தேர்தலை நடாத்த முடியாது?

பதில் -: – அவர் அவ்வாறு கூறியுள்ளமை தொடர்பில் என்னால் பதிலளிக்க முடியாது. எனினும் இவ்விடயத்தைத் தெளிவு படுத்தவேண்டியது முக்கியம்.

மாகாண சபைகள் தொடர்பில் உள்ள சட்டமானது 1988ம் ஆண்டின் 2ம் இலக்க மாகாண சபைத் தேர்தல் சட்டமாகும். அந்தச் சட்டத்தின் கீழ் 2017 ஒக்டோபர் மாதத்தில் முடிவடைந்த மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலை காலம் முடிவடைந்த சில வாரங்களில் நடாத்துவதற்கு நாம் ஆயத்தமானோம். அதனிடையே 2017ம் ஆண்டின் 17ம் இலக்க மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற்றிக் கொள்வதற்கு பாராளுமன்றம் நடவடிக்கை மேற்கொண்டது. அந்த புதிய முறையின் கீழ் விகிதாசார முறைக்கு பதிலாக கலப்பு விகிதாசார முறை மாற்றப்பட்டது.

இது சரியாக முதல் வீட்டை உடைத்துவிட்டு புதிய வீடொன்றைக் கட்டுவதைப் போன்றதாகும். குறைந்தது பழைய அத்திவாரம் கூட இல்லை. எனவே தற்போது மீண்டும் விகிதாசார முறையில் மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதாயின் 2017ம் ஆண்டின் 17ம் இலக்க திருத்தச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டி வரும்.

பாராளுமன்றத்தின் சட்டத்தை நீக்கிவிட்டு பழைய சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முடியுமாயின் நாம் அனேகமான விடயங்களை மாற்றி அமைப்போம்.

எம்மால் அவ்வாறு மாற்றங்களைச் செய்வதற்கு அதிகாரங்கள் இருக்குமாயின் செலவு அறிக்கையினை சமர்ப்பிக்க, செலவுகளை வரையறுக்க, இளைஞர்களுக்கு கண்டிப்பான பிரதிநிதித்துவத்தை வழங்க, போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தாம் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என்று சான்றிதழைக் கோருவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம். எனினும் அவ்வாறு செய்வதற்கு எமக்கு அதிகாரங்கள் இல்லை.

முன்னாள் ஜனாதிபதியையோ வேறு அரசியல்வாதிகளையோ அசௌகரியங்களுக்கு உள்ளாக்குவதற்கான தேவை எமக்கில்லை. அவரது கருத்தை அவர் தெரிவித்திருக்கின்றார். எமது தெளிவை நாம் வழங்குகின்றோம்.

கேள்வி: – – மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லையா?

பதில்: – – கலாநிதி தவலிங்கத்தின் தலைமையில் சமர்ப்பிக்கப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கை பெப்ரவரி 14ம் திகதி மாகாண சபை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. அமைச்சர் அதனைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அது பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டது. எனினும் இன்னனும் அது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. அந்த அறிக்கைக்கு அமைய பாராளுமன்றத்தில் அது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்.

நாம் ஏப்ரல் மாதத்திலும், மே மற்றும் ஜூன் மாதங்களிலும் இது தொடர்பில் செயற்படுமாறு வேண்டுகோள் விடுத்து மூன்று கடிதங்களை பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகளுக்கு அனுப்பினோம். இப்போது நாம் எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம். பாராளுமன்றத்தில் நம்பிக்கை வைக்குமாறு சபாநாயகர் கூறியிருக்கின்றார்.

கேள்வி -: – நீங்கள் என்னதான் கூறினாலும் அரசியல்வாதிகள் விரலை நீட்டுவது தேர்தல் ஆணைக்குழுவிற்கேயாகும்?

பதில் : — அதனையிட்டு வேதனையாக உள்ளது.

கிரிக்கட் போட்டி ஒன்று தோல்வியடைந்தால் துடுப்பாட்டக்காரரையும், பந்து வீச்சாளரையும் குற்றம் கூறுவதில் பலனில்லை. மொத்த அணியும் அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும். அதே போன்று மொத்த பாராளுமன்றமும் பொறுப்புக் கூற வேண்டும். அதே போன்று தற்போது கலைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளின் பிரிவுகளின் மக்களுக்கும் இது தொடர்பில் பொறுப்புள்ளது. கேகாலை மாவட்டத்தின் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்களது கூட்டமைப்பினால் எனக்கு ஒரு நினைவூட்டல் வழங்கப்பட்டது. அது தவிர முகநூலில், தபால் அட்டைகள் மூலம் பேசுவதற்குப் புறம்பாக மக்களின் அக்கறையின்மையும் பிரச்சினையே.

கேள்வி: – – பிரதான அரசியல் கட்சிகளைப் போன்று சில புதிய அரசியல் கட்சிகளிலிருந்தும், முக்கியமான நபர்கள் சிலரும் 2020ம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாப் பேச்சுக்கள் அடிபடுகின்றது. அவர்களிடையே மஹிந்த தேசப்பிரியவின் பெயரும் உள்ளதே….?

பதில் -: – தேர்தல் ஆணைக்குழு அமைக்கப்பட்டு மூன்றாவது கூட்டத்தின் போது தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தேர்தலில் போட்டியிடும் விருப்பத்தில் இருந்தால் அவ்வாறானவர்கள் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறி குறைந்தது இரண்டு வருடங்களுக்குப் பின்னரே தேர்தலில் போட்டியிட வேண்டும் என நான் பிரேரணை ஒன்றை முன்வைத்தேன். எமது அதிகாரிகளுக்கும் நாம் கூறியிருக்கின்றோம். எவரேனும் ஒருவர் தேர்தலில் போட்டியிட விரும்பினால் அவ்வாறானவர்கள் காலதாமதமின்றி ஆணைக்குழுவிலிருந்து விலகிவிட வேண்டும் என்று அறிவித்திருக்கின்றேன்.

தமது உறவினர் ஒருவர் பஸ்ஸில் ஏறும் வரை பஸ்ஸை நிறுத்தி வைத்துக் கொண்டிருப்பதற்கு எதிர்ப்பைக் காட்டும் நாம் எமது அழுத்தங்கள் இருக்கும் போது தேர்தலைக் கேட்பது சரியானதா?

இந்தியாவின் தேர்தல் ஆணைக்குழுவின் டி. என். செஷான் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பிரதான தேர்தல் ஆணையாளராக இருந்த கலாநிதி கில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று அமைச்சரவை அமைச்சரானார். எனினும் அவ்வாறான நிலை நல்லதல்ல.

அறுபதாம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து எமது குடும்பம் அரசியல் தொடர்புகளைக் கொண்டிருந்த குடும்பம். அரசியல் எனக்கு விளங்கக் கூடிய ஒரு விடயம். எனினும் நான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை.

வெற்றியடைவது, தோற்றுப் போவது என்பது வேறு விடயம். அவற்றை விட சுய கௌரவம் மற்றும் மனச்சாட்சி போன்றன மிகவும் முக்கியமாகும்.

கேள்வி -: – அரச நிறுவனம் ஒன்று புதிய ஊடகப் பயன்பாட்டினால் மக்களோடு நேரடி தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பில் இந்த நூற்றாண்டில் முன்மாதிரியாக ஆகியிருப்பது தேர்தல் ஆணைக்குழுவாகும். அவ்வாறான தேர்தல் ஆணைக்குழுவின் சமூக வளைத்தளச் செயற்பாடுகளை பலவீனமாக்குவதற்கான நிலை உள்ளதா?

பதில் – : -தேர்தல்கள் ஆணைக்குழு சமூக வலைத்தள பயனாளர்களுடன் மேற்கொள்ளும் தொடர்புகளை ஒரு போதும் நிறுத்தப்போவதில்லை. இன்றும் வாக்காளர்களைக் கணக்கிடுவதற்கு ஒன்லைன் மயப்படுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

அதே போன்று எம்மோடு இணைந்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சமூக வலைத்தள பயனாளர்களுடனும் இணைந்து செயற்பட்டுக் கொண்டு செல்கின்றோம்.

நான் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளும் செயற்பாடுகளைச் சற்றுக் குறைத்துள்ளேன். தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ கணக்கின் ஊடான தொடர்பாடல் நடவடிக்கைகளை செயற்திறன்மிக்கதாக முன்னெடுத்துச் செல்கின்றோம். எனினும் எனது நண்பர்களுடன் இருக்கும் சமூக வலைத்தளத் தொடர்புகள் அவ்வாறே வைத்துக் கொள்கின்றேன்.

வாக்காளர்களுக்கு வழங்குவதற்கான செய்தி ஒன்று என்னிடமுள்ளது. அதற்கும் தினகரன் மூலம் இடம் தாருங்கள்

அனைவரும் தமது பெயர்களை வாக்காளர் பெயர் பட்டியலில் பதிவு செய்து கிராம அதிகாரிகள் ஊடாக தேர்தல் அலுவலகத்திற்கு அனுப்புங்கள். இதுவரை உங்களுக்கு வாக்காளர் விண்ணப்படிவங்கள் கிடைக்காவிட்டால் தேர்தல்கள் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.

ஆகஸ்ட் 10ம் திகதிக்குப் பின்னர் முறையீடுகள் மூலம் மாத்திரமே வாக்காளர் உரிமை கோர முடியும். 2019 ஜனவரி 8ம் திகதியின் பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதற்கு ஜனாதிபதியினால் முடியும். அவ்வாறு நடந்தால் இந்த வாக்காளர் பட்டியல் மூலமாகத்தான் தேர்தல் நடாத்தப்படும். நீங்கள் ஜனநாயகத்தை விரும்புபவர்களாயின் அதன் நடைமுறை வெளிப்பாடான வாக்களிப்புக்காக உங்களுக்கு இருக்கும் உரிமையினைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

Related posts

Leave a Comment