சென்னையில் தலைமைச்செயலகம் அருகே நேற்று மறியலில் ஈடுபட்ட மு.க ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான 2-ம் நாள் விவாதம் நடைபெற்றது. முன்னதாக, காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் கூட்டம் தொடங்கியது. கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, விசுவ இந்து பரிஷத் நடத்தும் ராம ராஜ்ய ரத யாத்திரையை கண்டித்தும், மத்திய பா.ஜ.க. அரசுடன் தமிழக அரசை இணைத்தும் சில கருத்துகளை தெரிவித்தார். இந்த விவகாரத்தால் நேற்று, தமிழக சட்ட சபையில் கடும் அமளி ஏற்பட்டது. சபாநாயகர் ப.தனபால் எழுந்து நின்று, அனைவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். இருக்கையில் அமரும்படியும் வலியுறுத்தினார்.

ஆனால், சபாநாயகரின் சமாதானத்தை ஏற்காத தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக குரல் எழுப்பிக் கொண்டே இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் ப.தனபால், தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றம் செய்ய அவைக்காவலர்களுக்கு உத்தரவிட்டார். உடனே, மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட தி.மு.க. உறுப்பினர்கள், காலை 11.40 மணியளவில் தலைமைச்செயலகத்திற்கு எதிரே காமராஜர் சாலையில் அமர்ந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. உறுப்பினர்கள் பலர் தரையில் அமர்ந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.

சம்பவ இடத்தில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். காமராஜர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்களை போலீசார் அப்புறப்படுத்தி, கைது செய்து வேனில் ஏற்றினார்கள். இதனால், அப்பகுதியில் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் ராயபுரத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட தி.மு.க. – காங்கிரஸ் உறுப்பினர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், சாலை மறியலில் ஈடுபட்டதற்காக திமுக செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மு.க ஸ்டாலின் உட்பட 75 எம்.எல்.ஏக்கள் மீது கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி ஒன்று கூடுதல், போக்குவரத்துக்கு இடையூறு செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *