திருகோணமலையில் ஆசிரியை கொலை: இருவருக்கு மரண தண்டனை

திருகோணமலை – சம்பூர், பாட்டாளிபுரத்தில் ஆசிரியை ஒருவரை கொலை செய்த இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மேல் நீதிமன்றத்தில், நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதிவாதிகள் இருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மரண தண்டனை விதித்துள்ளார்.

வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களில் முதலாவது சந்தேகநபரான 38 வயதான பாலசிங்கம் நகுலேஸ்வரன் மற்றும் இரண்டாவது சந்தேகநபரான 28 வயதான விஜயகுலசிங்கம் சந்திரபாலன் ஆகியோருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட ஏனைய இரண்டு சந்தேகநபர்களான 32 வயதான கிருஷ்ணபாலன் ரஜிவ்காந்தன் மற்றும் 27 வயதான சிவகுமார் சிவரூபன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமையால் அவர்களை விடுதலை செய்வதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை – சம்பூர், பாட்டாளிபுரம் மற்றும் சந்தோசபுரம் ஆகிய கிராமங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் 33 வயதான குருகுலசிங்கம் சிறிவதனி என்ற ஆசிரியை கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி கூரான ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

நகை திருட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த கொலை சம்பவம் நடத்தப்பட்டமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment