சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தில் ஒரு கோடி ரூபா மோசடி செய்த நபர் கைது!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் நினைவாக உருவாக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் பொறுப்பு வகித்த கால்நடை அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கிய பிரஜாசக்தி நிலையங்களுக்கும் பெருந்தோட்ட பகுதிகளுக்கும் செட்லைட், இணைய வசதியை பெற்றுக் கொடுக்கும் திட்டத்தில் ஒரு கோடி ரூபா மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் முன்னாள் பிரதான நிதி பணிப்பாளர் செல்லதுரை லோகநாதன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பிரஜாசக்தி நிலையங்கள் மற்றும் பெருந்தோட்ட பகுதிகளுக்கு உபகரணங்கள் மற்றும் இணைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பணிப்பில் அவரது பொறுப்பில் இருந்த கால்நடை அபிவிருத்தி அமைச்சின் மூலமாக சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்திற்கு 62 மில்லியன் ரூபா (6 கோடியே இருபது லட்சம்) நிதி வழங்கப்பட்டது.

2003ம் ஆண்டு தொடக்கம் 2013ம் ஆண்டு வரையான காலத்தில் நாட்டின் 24 மாவட்டங்களுக்கு செட்லைட் மூலம் இணைய வசதிகளை பெற்றுக் கொடுக்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டது. ஈ-கிசோக் என்ற நிறுவனத்திற்கு இது தொடர்பான பணிகள் ஒப்படைக்கப்பட்டு ஒப்பந்தமும் செய்துகொள்ளப்பட்டது.

எனினும் குறித்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 62 மில்லியன் ரூபாவில் 52 மில்லியன் ரூபா மாத்திரமே குறித்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் மிகுதி 10 மில்லியன் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் ஊழல் விசாரணை பிரிவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரணை நடத்திய ஊழல் விசாரணை பிரிவு சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் முன்னாள் பிரதான நிதிப் பொறுப்பாளர் செல்லதுரை லோகநாதனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியது. யோகநாதன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பிணை வழங்குமாறு சட்டத்தரணி கோரியபோதும் அதனை நிராகரித்த கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன எதிர்வரும் 15ம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிதி மோசடியுடன் முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் அவர் அமைச்சராக இருந்த காலத்தில் உள்நாட்டில் மேற்கொண்ட விமான சுற்றுப்பயணங்களுக்கு குறித்த நிதி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் பிரஜா சக்தி திட்டத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் லட்சக்கணக்கான பணம் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தனிப்பட்ட தேவைகளுக்கு இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் விரைவில் முக்கிய நபர்கள் கைது செய்யப்படலாம் என்றும் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related posts

Leave a Comment