சம்பந்தனின் பதவியால் அரசாங்கம் – கூட்டு எதிகட்சி இடையே மோதல்

கூட்டு எதிர்க்கட்சி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்ல எனவும், அது அரசியல் கோஷ்டி என்பதால் அப்படியான கோஷ்டிக்கு நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க முடியாது எனவும் நாடாளுமன்ற சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 5 அரசியல் கட்சிகள் தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்து வருகின்றன. அந்த 5 அரசியல் கட்சிகளில் கூட்டு எதிர்க்கட்சி உள்ளடங்காது. கூட்டு எதிர்க்கட்சி என்பது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒரு குழு, அப்படியான குழு தனக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோருவது நியமற்றது. அத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கும் முரணானது எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கி கூட்டு எதிர்க்கட்சிக்கு உரிய அங்கீகாரம் வழங்கவில்லை எனில் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டு வரப் போவதாக கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

70 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டு கூட்டு எதிர்க்கட்சிக்கு உரிய அங்கீகாரம் வழங்குவது சம்பந்தமாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, சபாநாயகரின் சாதகமான பதிலை எதிர்பார்த்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

கடந்த 2004ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கத்தில் இருந்து விலகிய மக்கள் விடுதலை முன்னணியின் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்க்கட்சியின் சுயாதீனமான நாடாளுமன்றக்குழுவாக அங்கீகரித்ததாகவும், அந்த முன்னணியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் குமாரவை சுயாதீனமான உறுப்பினராக ஏற்றுக்கொண்டதாகவும் கூட்டு எதிர்க்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உதாரணத்திற்கு அமைய சபாநாயகர் எதிர்வரும் 7ஆம் திகதி சாதகமான பதிலை தருவார் என எதிர்பார்ப்பதாகவும், அப்படி சாதகமான பதில் கிடைக்காது போனால் நாடாளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் கடும் நடவடிக்கைகளில் இறங்க போவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment