கிழக்கிற்கும் விமான நிலையம் : பிரதமர்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தினை கட்டியெழுப்பும் வகையில் விசேட பொருளாராதார அபிவிருத்தித் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாடிக்கட்டிடம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கிராமிய மட்டத்திலே பாரியளவிலான அபிவிருத்தித் திட்டங்களை 2019, 2020ஆம் ஆண்டுகளில் தொடர்சியாக மேற்கொள்ளவுள்ளோம்.

அனைவரும் இத்திட்டத்தில் பங்குகொண்டு வேலை செய்வதற்காக இத்திட்டங்களை நாங்கள் கிராமத்திற்கு முன்னெடுத்துச் செல்வோம். அந்த அடிப்படையில் கிராம சக்தி வியாபார வேலைத்திட்டம் ஜனாதிபதி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது. கம்பெரலிய எனப்படும் கிராமப் புரட்சியை நாங்கள் ஏற்படுத்திக்கொண்டு செல்கின்றோம்.

அதன்மூலமாக பாரிய வீதி அபிவிருத்திகளை மேற்கொள்ளல், நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்தல், தேசிய இளைஞர் சேவை மன்றத்தினுடைய வேலைத் திட்டங்கள் போன்றவையெல்லாம் கம்பெரலிய வேலைத்திட்டத்திற்கு புறம்பாக செய்யப்படவிருக்கின்ற வேலைத்திட்டங்களாகும்.

கிழக்கு மாகாணம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாகாணம் என்பதால் வேறு ஒரு பொருளாதார அபிவிருத்திச் செயற்பாட்டினை இங்கு அமுல்படுத்த இருக்கின்றோம்.

சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி செய்வதற்குரிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாங்கள் கலந்துரையாடியுள்ளோம். அதனை அபிவிருத்தி செய்வதில் ஒரு பிரச்சினை இருக்கின்றது. போக்குவரத்துப் பிரச்சினையாகும்.

இந்தப் பகுதியில் விமான போக்குவரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்திருக்கின்றோம். அதன்மூலம் சுற்றுலாத்துறையினூடாக பலருக்கு வாழ்வாதாரம் ஏற்படும்” என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

Related posts

Leave a Comment