கடுவலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; காரணம் வெளியானது

மாலபே – கடுவலை பிரதான வீதியின், கொத்தலாவல பிரதேசத்தில் நேற்று காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்துடன் தொடர்பாக சந்தேகநபரை கைது செய்வதற்காக நுகேகொடை பொலிஸ் அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ்  விசேட பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கடுவலை கொத்தலாவல சந்தியில் நேற்று காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன், இது திட்டமிட்டு குற்றச் செயல்களில் ஈடுபடும் இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதலின் விளைவே என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் போமிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான ருவன் துஷார என்ற பிடலி துஷார என்பதோடு, இவர் போதைப் பொருள் வர்த்தகம் உட்பட பல்வேறு குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்,மேலும் இரு குழந்தைகளின் தந்தையென தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் மீது ஒரு வருடத்திற்கு முன்னர், கடுவலை வெலேசந்தி பிரதேசத்தில் வைத்து இனந்தெரியாதவர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதுடன் அதில் உயிர் தப்பியவர் என்று தெரியவந்துள்ளது.

அதேவேளை பிடலி துஷார, அண்மையில் கொலை செய்யப்பட்ட பாதாள உலக குற்றவாளியான சமயங் என்பவரின் எதிரணியை சேர்ந்தவர் எனவும் தெரியவருகிறது.

இதேவேளை இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட மற்றைய நபர் 49 வயதான கொத்தலாவலகே பியவங்ச சோமகுப்த என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியக்கூடிய ஒருவர் என்றும், அவர் வீட்டுக்கு தேவையான நிற பூச்சை கொள்வனவு செய்வதற்காக பிரதான வீதிக்கு சென்றிருந்த போது இந்த சம்பவத்தில் சிக்கியுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இருந்து ரி. 56 ரக துப்பாக்கிக்குறிய 18 தோட்டாக்களை பொலிஸார் மீட்டுள்ளதுடன், சம்பவம் இடம்பெற்ற போது அருகில் முச்சக்கர வண்டியில் இருந்த மேலும் ஒருவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *