கடத்தல்காரரிடமிருந்து 11 சிறுவர்கள் மீட்பு! – மெக்சிகோவில் சம்பவம்

நியூ மெக்சிகோவின் எல்லைப் பகுதியிலுள்ள கிராமப் புறமொன்றில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 11 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

டயர்களைக் கொண்டு மதிலிடப்பட்ட கூடாரமொன்றை அந்நாட்டு அமைதிப்படைப் பிரிவினர் சுற்றிவளைத்த போது, குறித்த 11 சிறுவர்களும் மீட்கப்பட்டுள்ளனர். அத்தோடு, குறித்த சிறுவர்களை கடத்தியவர்கள் எனக் கருதப்படும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

காணாமற்போன, அபுல் கானி வஹ்ஹாஜ் என்ற ஜோர்ஜியா சிறுவனைத் தேடும் பணியை மேற்கொண்ட போதே குறித்த பகுதியை கண்டுபிடித்ததாக குறிப்பிடப்படுகின்றது.

எனினும் அபுல் கானி வஹ்ஹாஜ் என்ற சிறுவன் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட கூடாரத்தில் அச்சிறுவன் தங்கியிருந்தமைக்கான தடயங்கள் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர், ஏற்கனவே 3 வயது குழந்தையொன்றை கடத்திய வழக்கில் தேடப்பட்டு வருபவர் என பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்நிலையில், கூடாரத்திலிருந்து 3 வயது குழந்தைகள் அணியும் அளவிலான ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் அப்பகுதியில் மேலும் பல குழந்தைகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மீட்கப்பட்ட 11 சிறுவர்களின் ஆரோக்கியம் மற்றும் உடல்நிலையைப் பேணும் வகையில், அவர்கள் நியூ மெக்சிகோவின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment