இலங்கை அணியின் முகாமையாளராக சரித் சேனநாயக்க

இலங்கை அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சரித் சேனநாயக்க இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய முகாமையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதிய அணி முகாமையாளரின் பதவிக்காலம் ஜூலை மாதம் 25 ஆம் திகதியில் இருந்து செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது தென்னாபிரிக்க அணியுடனான ஒரு நாள் தொடரிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணிக்காக பணிபுரியவுள்ள சேனநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஆசிய கிண்ணத்துடன் தனது பணிகளை நிறைவு செய்யவுள்ளார்.

கொழும்பு ஆனந்த கல்லூரியின் பழைய மாணவரான சேனநாயக்க, இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக 2008 ஆம் ஆண்டில் முதல் தடவையாக பணிபுரிந்திருந்ததுடன், தொடர்ந்து இன்னும் இரண்டு தடவைகள் முகாமையாளராக கடமையாற்றியிருந்தார். இதன் பின்னர் 2016 ஆம் ஆண்டு இலங்கை அணியின் முகாமையாளராக மீண்டும் பொறுப்பேற்ற சேனநாயக்க இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுப் பயணம், அவுஸ்திரேலிய அணியுடன் இலங்கைக்கு வெற்றிகரமாக அமைந்த இருதரப்பு தொடர் போன்றவற்றிலும் இலங்கை அணியின் முகாமையாளராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேசிய அணி தவிர சேனநாயக்க, 2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து இலங்கை “ஏ” கிரிக்கெட் அணியின் முகாமையாளராக இருந்து வந்ததுடன் அவரது ஆளுகையில் இருந்த இலங்கையின் இரண்டாம் நிலை கிரிக்கெட் அணி பங்களாதேஷ், மேற்கிந்திய தீவுகள் ஆகியவற்றுடனான சுற்றுப் பயணங்களில் சிறப்பான பதிவுகளை காட்டியிருந்தது.

அண்மையில் இலங்கை அணியின் இரண்டு வீரர்கள் ஒழுங்குமுறைகளை பின்பற்றத் தவறி போட்டித்தடைகளைப் பெற்றிருந்தனர். இதனால் புதிய அணி முகாமையாளருக்கு வீரர்களின் ஒழுக்கம் தொடர்பில் இனி அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

சேனநாயக்கவுக்கு முன்னர் இலங்கை அணியின் முகாமையாளராக இருந்த அசங்க குருசிங்க தற்போது இலங்கை கிரிக்கெட்டின் செயற்பாடுகளை ஒழுங்கமைப்புச் செய்யும் முக்கிய உத்தியோகத்தராக மாறியுள்ளார்.

“எனக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்தமைக்காக நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றேன். தொழில்சார் ரீதியிலான ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒழுங்குமுறைகள் உண்டு. அந்தவகையில் இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டுக்கு நாங்கள் விளையாடும் காலத்தில் இருந்தே கடுமையான சட்டதிட்டங்கள் காணப்பட்டிருந்தன. தேசிய அணி என்பது நாட்டிலுள்ள அனைத்து வீரர்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் ஒன்றாகும். இதேவேளை, அவர்கள் (தேசிய அணி வீரர்கள்) தொழில்முறையில் தேர்ச்சியடைந்தவர்கள். கடந்த காலம் கடந்த காலமே, துரதிஷ்டவசமாக சில சம்பவங்கள் அண்மைக்காலத்தில் நடைபெற்று விட்டன. ஆனால், எனது பொறுப்பு நாம் விதிகளுக்கு கட்டுப்பட்டு நடப்பவர்களாக உள்ளோம் என்பதை உறுதிப்படுத்துவதாகும். இங்கே யாருமே விதிமுறைகளுக்கு மேலானவர்கள் அல்ல என்பதோடு, விளையாட்டு அனைவரை விடவும் மேலானதாகும்“

Related posts

Leave a Comment