அவுஸ்ரேலியாவின் 30ஆவது பிரதமராக ஸ்கொட் மொறிசன் பதவியேற்பு

அவுஸ்ரேலியாவின் 30ஆவது பிரதமராக ஸ்கொட் மொறிசன் பதவியேற்றுக் கொண்டார்.

அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் ரேர்ண்புல், வலுக்கட்டாயமாக பதவியிலிருந்து விலக்கப்பட்டதை அடுத்து, ஸ்கொட் மொறிசன் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார்.

அவுஸ்ரேலியாவில் ஆளும் கட்சியை சேர்ந்த ஒருவரே பிரதமராக பதவி வகிக்க முடியும் என்பதற்கு அமைவாக, ஆளும் கட்சியான லிபரல் கட்சியை சேர்ந்த மல்கம் ரேர்ண்புல் இதுவரையில் பிரதமராக பதவி விகித்து வந்தார்.

எனினும், அண்மைக் காலமாக ஆளும் லிபரல் கட்சிக்கான செல்வாக்கு மக்கள் மத்தியில் குறைந்து வந்ததுடன், ரேர்ண்புல்லின் எரிசக்தி கொள்கைக்கு அவரது கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியது.

அதன்படி அவரது கட்சி உறுப்பினர்கள் ரேர்ண்புல் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வந்ததற்கமைய கடந்த செவ்வாய்க்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதில் ரேர்ண்புல் ஏழு வாக்குகளால் வெற்றியீட்டினார்.

எனினும், குறித்த வாக்கெடுப்பில் ரேர்ண்புல்லுக்கு ஆதரவாக வாக்களித்த மூன்று அமைச்சர்கள், தங்கள் பதவிகளை இராஜினாமா செய்து ரேர்ண்புல்லுக்கு எதிரான தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். அத்துடன், இரண்டாவது வாக்கெடுப்பிற்கும் அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி நடத்தப்பட்ட இரண்டாவது வாக்கெடுப்பில் அவர் தோல்வியடைந்ததையடுத்து பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதனையடுத்து நடத்தப்பட்ட கட்சியின் தலைமைத்துவ வாக்கெடுப்பில், கன்சர்வேட்டிவ் கட்சியின் மொரிசனுக்கும், அந்நாட்டின் முன்னாள் உள்துறை அமைச்சரான பீட்டர் டட்டனுக்கும் இடையே நிலவிய கடும் போட்டியில் மொரிசன் 45-40 வாக்குகள் கணக்கில் வெற்றிபெற்றதை அடுத்து மொரிசன் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார்.

Related posts

Leave a Comment