அரசியலமைப்பிற்கு பங்களிப்பு வழங்கும் பிரதிநிதிகளாக செயற்படுவது யாருக்காக?

புதிய அரசியலமைப்பு சட்டமூலத்தினை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு சமர்ப்பித்த ஆவணம் வழிநடத்தல் குழுவால் நிராகரிக்கப்பட்டது.

கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரது அரசியல் நோக்கத்திற்காக இந்த செயற்பாடுகளை மேற்கொள்வதாக பாராளுமன்றத்தில் எதிர்த்தரப்பு நேற்று (19) குற்றஞ்சாட்டியது.

இது தொடர்பில் அவர்கள் இருவரும் இன்று பதிலளித்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்ததாவது,

இந்த ஆவணத்தில் யாரும் கையழுத்திடவில்லை என்பதை நான் கட்டாயமாகக் கூறவேண்டும். 6 நிபுணர்கள் மின்னஞ்சலூடாக இந்த ஆவணத்தினை வழங்குவதற்கு இணங்கினர். மற்றைய இருவரும் ஆவணத்தினை வழங்குவதற்கு இணங்கினர். சுரேன் பெர்னாண்டோ, கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன மற்றும் நான் உள்ளிட்டோர் இந்த ஆவணத்தினை தயாரித்ததாக கதை பரப்பப்படுகின்றது. இது முழுப் பொய். இந்த பிரச்சினை எழுந்தபோது நான் ஆவணத்தினை பார்த்தேன். நான் அந்த ஆவணத்தினைக் கொண்டுவந்து அதன் பின்னர்தான் நிபணர்கள் 6 பேரும் முன்வைத்த ஆவணத்தை வாசித்தேன். அதில் நான் இணக்கம் தெரிவிக்காத விடயங்கள் பல இருந்தன. இது தொடர்பில் நான் வழிநடத்தல் குழுவில் கலந்துரையாடினேன். அதன் பின்னர் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய, வழிநடத்தல் குழுவினால் அரசியலமைப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்ததாவது,

நிபுணர்கள் அறுவரினால் முன்வைக்கப்பட்ட சட்டமூலம் தொடர்பில் எனது எந்தவொரு பங்களிப்பும் இருக்கவில்லை என்பதை நான் விளக்கமாகவும் பொறுப்பாகவும் கூறுகின்றேன். இதிலுள்ள சில உறுப்புரைகள் தொடர்பில் எனது நிலைப்பாடு மாறுபட்டதாகும். நான் அதனை இங்கு தெரிவிக்கவில்லை. நான் அதனைக் கூறுவதற்கு இடமுள்ளது. வழிநடத்தல் குழுவில் இது தொடர்பான கருத்துக்களைத் தெரிவிப்பேன்.

19 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்த செயற்பாடுகளின் பின்னணியில் இருந்த நபரே கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன.

இந்த சீர்திருத்தத்தின் இறுதியில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் பகுதியளவில் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டது.

எனினும், பிரதமரை நீக்குவதற்கான ஜனாதிபதியின் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டதுடன் சிக்கல் நிலை உருவாகியது.

இந்த அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் பிரதமருக்கு வலுவான அதிகாரங்களை உள்ளடக்குவதற்கு கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன உள்ளிட்ட குழுவினர் முயற்சித்தாலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினால் ஓரளவிற்கு பலவீனமானது.

ஜனாதிபதியின் அதிகாரங்கள் மற்றும் ஊடகங்களை பலவீனப்படுத்தி ஊடகவியலாளர்களை சிறையில் அடைக்கும் சட்டம் உள்ளடக்கப்பட்டிருந்தாலும், நீதிமன்றத்தின் முன் அந்த முயற்சி தோல்வியடைந்தது.

கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன உள்ளிட்ட குழுவினரின் உள்நோக்கத்தினை விளங்குவதற்கு இந்த சம்பவம் போதுமானது.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் செயற்பாடு தொடர்பில் புரிந்துகொள்வதற்கான சந்தர்ப்பங்கள் சில கடந்த காலங்களில் இடம்பெற்றன.

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட, மத்திய வங்கியில் சேவையாற்றிய எஸ்.பதுமனாபனுக்காக ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகிய சுமந்திரன் பின்னர் நீதிமன்றத்திலும் ஆஜராகினார்.

பிரதி சபாநாயகரை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் எதிர்க்கட்சியின் வேட்பாளரான சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளைக்கு ஆதரவு தெரிவித்த ஆர். சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு, வாக்கெடுப்பின் போது காணாமற்போனதன் பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இருப்பதாக எதிரணி அரசியல் குழுக்கள் குற்றச்சாட்டு முன்வைத்தன.

இவை இவர்களது நோக்கம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான உதாரணங்கள் சிலவே.

இந்த நபர்கள் அரசியலமைப்பிற்கு பங்களிப்பு வழங்கும் பிரதிநிதிகளாக செயற்படுவது யாருக்காக?

Related posts

Leave a Comment