அபிவிருத்தி புரட்சி என்பது அரசியல்வாதிகளின் பணப்பைகளை நிரப்புவதல்ல

நாட்டின் சில பகுதிகளுக்கு மட்டுமே கடந்த காலங்களில் அபிவிருத்திகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. இதன் காரணமாக ஏற்பட்ட ஏற்றத் தாழ்வுகள் நீக்கப்படும். இதனை நிவர்த்தி செய்யும் வகையில் சமமான அபிவிருத்தியை முழு நாட்டுக்கும் வழங்கும் விரிவான நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

“எழுச்சிபெறும் பொலனறுவை” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 180 அபிவிருத்தித் திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் வரலாற்று முக்கியத்துவ நிகழ்வு​ நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதன் ஓர் அங்கமாக திவுலங்கடவல மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாடசாலைக்கட்டிடம் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

பொலனறுவை மாவட்டத்தில் சிங்கள அரசர்களுக்கு பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பாரிய அபிவிருத்தி திட்டமான ”எழுச்சிபெறும் பொலனறுவை” திட்டத்திற்கு 6,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது பொலனறுவைமாவட்டத்தின் அபிவிருத்திக்காக இதுவரையில் அரசாங்கம் ஒதுக்கியுள்ள பாரிய நிதியாகும். இதன் மூலம் மாவட்டம் எங்கிலும் பல்வேறு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டு மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ளன.

2015 − 2018 வரை நூற்றுக்கணக்கான திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இவற்றை விட மேலும் இவ்வாறான 180 அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

ஹிங்குரங்கொட, மெதிரிகிரிய, எலஹெர பிரதேச செயலாளர் பிரிவுகளில் சமயம், கல்வி, சுகாதாரம் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன. இதன் கீழ் 60 புதிய அபிவிருத்தித் திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வுகள் அமைச்சர்கள், துறைசார்ந்த நிபுணர்கள் மற்றும் முக்கியஸ்தர்களின் பஙகேற்புடன் இடம்பெற்றன. நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

பொலன்னறுவை மட்டுமன்றி நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் இந்த பாரிய அபிவிருத்தி புரட்சி ஆரம்பிக்கப்படும். கொங்கிரீட் அபிவிருத்தியன்றி மக்களின் தேவைகள் மற்றும் அவர்களது உணர்வுகளை புரிந்துகொண்டு மக்கள் சார்பு அபிவிருத்தியான இந்த நிகழ்ச்சித்திட்டம் நாட்டு மக்களின் வாழ்க்கையை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்லும்.

மக்களிடம் கையளிக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் எதிர்கால தலைமுறையின் நலனை இலக்காகக் கொண்டதாகும். அந்த வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் புதிய அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகள் ஜனாதிபதி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டன.

425 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட சேவாகம ஓனேகம குடிநீர் திட்டத்தின் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு நகர அபிவிருத்தி நீர் வழங்கல் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், பி.ஹரிசன், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரினால் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. 2,000 குடும்பங்களுக்கும் மேற்பட்டவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இத்திட்டம் 20 மாதங்களில் நிறைவு செய்யப்படவுள்ளன.

மேலும் பிரதேசத்தில் 250 குடும்பங்களுக்கு பயனளிக்கும் புதூர் குடிநீர் திட்டத்தை திறந்து வைத்தல், புதூர் முஸ்லிம் கனிஷ்ட பாடசாலையின் 8 வகுப்பறைகளை கொண்ட இரண்டு மாடிக் கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்தல் என்பன அமைச்சர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

எலஹெர பிரதேச செயலாளர் பிரிவில் பகமூன மகாசென் மகா வித்தியாலயத்தின் புதிய இரண்டு மாடி வகுப்பறை கட்டிடம் அமைச்சர் தயா கமகே, இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன மற்றும் வயம்ப பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஈ.எம்.பி.ஏக்கநாயக்க ஆகியோரின் தலைமையில் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

புனர்நிர்மாணம் செய்யப்பட்ட கவுடுலுவெவ தேவாலயத்தை திறந்து வைக்கும் நிகழ்வும் புதிய இளைப்பாறும் மண்டபத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் சிட்னி ஜயரத்ன ஆகியோரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

திக்கல்புர கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வும் மெதிரிகிரிய நீர்ப்பாசன முகாமைத்துவ பிரிவை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் மேற்படி அமைச்சர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

மெதிரிகிரிய பிரதேச செயலாளர் பிரிவில் வடிகவெவ ஆரம்ப பாடசாலையின் புதிய வகுப்பறை கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்தல், மீகஸ்வெவ கனிஷ்ட வித்தியாலயத்தின் வகுப்பறை கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்தல் மற்றும் உதாரகம ஆரம்ப பாடசாலையில் கேட்போர்கூடம் ஒன்றுடன் கூடிய 8 வகுப்பறைகளை கொண்ட 3 மாடிக்கட்டிடம் மற்றும் மண்டலகிரிய வித்தியாலயத்தின் புதிய ஆரம்ப கற்றல் வள நிலையம் ஆகியன அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தலைமையில் மாணவர்களிடம் கைளிக்கப்பட்டன.

ஹிங்குரக்கொட, ரொட்டவெவ சிங்கள கனிஷ்ட வித்தியாலயத்தின் புதிய வகுப்பறை கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய, பாராளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன மற்றும் பேசல பண்டார ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

மெதிரிகிரிய தலாகொலவெவ ஆரம்ப பாடசாலையின் புதிய வகுப்பறை கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தல் மற்றும் குமுதுபுர ஆரம்ப பாடசாலையின் புதிய வகுப்பறை கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்தல் ஆகிய நிகழ்வுகள் பிரதி அமைச்சர் புத்திக்க பத்திரன மற்றும் மேல் மாகாண அமைச்சர் ரஞ்சித் சோமவங்ச ஆகியோரினால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன.

Related posts

Leave a Comment